(36) என் கதைக்கு அவர் பெயர்!
"மாநகர காவல்' படம் பாராட்டைப் பெற்றும் நான் அதிர்ச்சியடைந்தது ஏன்?
டைரக்டர் எம்.தியாகராஜன் சொன்ன கதை சரியில்லை என்பதால், நான் வேறு கதை தயார்பண்ணிச் சொன்னேன். திரைக்கதை வசனத்தையும் எழுதி, அதை நான் படித்தபோது ரசித்து அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் படத்தின் டைட்டிலில் "கதை, திரைக்கதை, டைரக்ஷன் எம்.தியாகராஜன்' என்று போட்டிருந்தார்கள். "வசனம் லியாகத்அலிகான்' என்று போட்டிருந் தார்கள்... அதனால்தான் அதிர்ச்சியடைந்தேன்.
இரவு படம் பார்த்தேன். மறுநாள் காலை ஏவி.எம்.சரவணன் சாரை சந்தித்துவிட்டேன். "கதை, திரைக்கதை பண்ணியது நான். என் பெயர் இல்லையே'' என்றேன்.
"உங்களிடம் பேசிவிட்டதாகச் சொன் னார்களே!'' என்று அவர் சொன்னார்.
ஜென்டில்மேன். அவரிடம் எப்பொ ழுதுமே ஒரு நேர்மை இருக்கும். அவரையே ஏமாற்றியிருக்கிறார்கள்.
அவரைப் பார்த்துவிட்டு நேராக ராஜா பாதர் தெரு வந்தேன். விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவரிடமும் சொன்னேன். "என் உழைப்பு மறைக்கப்பட்டுவிட்டது. எனது கற்பனைக்கு இன்னொருவர் பெயர் போட்டுக் கொள்வது என்ன நியாயம்?'' என்று கேட்டேன். என்னை இருவரும் சமாதானப்படுத்தினார்கள்.
அப்பொழுது இப்ராகிம் ராவுத்தர் சொன் னார்... "அண்ணே... ஏவி.எம்.ல விஜியோட கால்ஷீட் கேட்டப்பவே, எடிட்டர் மூலமாவும் (மாநகர காவல் படத்தின் எடிட்டர்) பேசுனாங்க. கால்ஷீட் குடுக்க முடிவானதுமே உங்களைத்தான் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என்று சொன் னோம். எடிட்டர் கெஞ்சினார். "தியாகராஜன் என்னோட நண்பர். ஒரு படம் பண்ணிட்டு அடுத்து படம் பண்ணாம இருக்காரு. ரொம்ப சிரமப்படுறாரு. லியாகத்அலிகான் சார் நிறைய படம் எழுதிக்கிட்டிருக்காரு, பிஸியா இருக்காரு... அதனால இந்தப் படத்தை தியாகராஜனுக்கு குடுங்க''ன்னு பலமுறை கெஞ்சியதால நாங்களும் ஓ.கே. சொன்னோம். தியாகராஜனும் எங்கள் கைகளைப் பிடித்துக் கேட்டார்... மறுக்க முடியல, நல்ல பையன்'' என்றார்.
"அண்ணே... இன்னிக்குத்தான் இந்த விஷயத்தைச் சொல்றீங்க. அதைக் கேட்டு நான் அதிர்ச்சி யாகல. தியாகராஜன் அவரோட வேலைய சிறப்பா பண்ணியிருக்காரு. நல்ல டைரக் டர்ங்கிறதை நிரூபிச்சிருக்காரு. ஆனா "டைரக்ஷன்' என்று மட்டும்தான் அவ ருடைய பேரை போட்டிருக்கணும். கதை, திரைக்கதை நான் பண்ணியிருக்கும்போது அதை அவர் பேர்ல எப்படிப் போட லாம்?'' என்று கோபப்பட்டேன்.
விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவருமே என்னை சமாதானப்படுத்தினார்கள்.
"எல்லாம் அந்த எடிட்டர் செஞ்ச வேலைண்ணே... விடுங் கண்ணே. இதனால நீங்க எதுவும் கெட்டுப் போயிரமாட்டீங்கண்ணே'' என்றார்கள். படம் நன்றாக வந்திருக் கும் மகிழ்ச்சி அவர்களுக்கு.
"நம்ம விஜிக்காகத்தாண்ணே நீங்க பண்ணுனீங்க. விஜி நல்லா வரணும்கிறதுதான உங்க ஆசை'' என்று கேட்டார் இப்ராகிம் ராவுத்தர்.
"ஆமாண்ணே...''
"இனிமே இதைப் பிரச்சினை யாக்க வேண்டாம்ணே. இது ஏவி.எம். படம் மட்டுமில்லண்ணே... நம்ம படம்ணே'' என்றார்.
அவர்களை மீறி என்னால் எதுவும் பேசமுடியவில்லை. அவர்கள் கோணத்திலிருந்து சிந்திக்கிறார்கள் என்று நினைக்க முடியாது. காரணம் அவர்களில் நானும் ஒருவன். ஆனால் ஒரு விஷயத்தில் என் மனம் ஆறுதல் அடையவில்லை.
டைரக்டர் தியாகராஜனை பார்க்கப் போனேன். அவர் எடிட்டிங் ரூமில் இருந்தார். எடிட்டரும் உடன் இருந்தார். இருவரிடமும் என் கோபத்தைக் கொட்டினேன். "என் கற்பனையை... என்னிடம் கேட்காமல், என்னிடம் சம்மதம் வாங்காமல் உங்கள் கற்பனை என்று டைட்டிலில் போடுவது நம்பிக்கைத் துரோகம் இல்லையா?'' என்று கேட்டேன். எனக்குப் பதில் சொல்ல அவர்களிடம் முகங்கள் இல்லை.
"இது கேவலமான புத்தியில்லையா தியாகு'' என்றேன்.
"எடிட்டர்தான்...'' என்று இழுத்தார் தியாகராஜன்.
"அவரு சொன்னா உங்களுக்கு கூச்சமா இல்லியா?'' என்றேன். என்னை சமாதானப்படுத்த முயன்றார்கள்.
டைரக்டரிடம் சொல்லிவிட்டு வந்தேன். "தியாகு... இந்தப் படம் நிச்சயம் வெற்றிப்படமாகும்... ஆனா நீங்க பெரிய டைரக்டராக முடியாது... இறைவன் விடமாட்டான்''.
நான் சொல்லியபடியேதான் நடந் தது. "மாநகர காவல்' படம் வெளிவந்து வெற்றிப்படமானது. தெலுங்கிலே டப் செய்யப்பட்டு, தமிழை விட பெரிய வர வேற்பைப் பெற்றது. இரண்டு மொழிகளி லும் வெற்றி. ஆனால் இருபது வருடங்களாக எம்.தியாகராஜன் அடுத்த படம் இயக்க வில்லை. ஒரு படம் வெற்றிபெற்றால் அந்த இயக்குநரைத் தேடி பல தயாரிப்பாளர்கள் வருவார்கள். பல ஹீரோக்கள் தொடர்பு கொள்வார்கள். ஆனால் தியாகராஜனுக்கு எதுவுமே நடக்கவில்லை. நான் சொன்னதி னால் இப்படி நடந்தது என்று கூறமாட் டேன். ஆனால் "இறைவன் மிகப்பெரியவன்' என்பது உண்மையானது. எப்பொழுதுமே அது உண்மையாகும். இதேபோல இன் னொரு படத்தின் கசப்பான அனுபவமும் எனக்கு ஏற்பட்டது. அதைச் சொல்லு வதற்கு முன்... அரசியல் காரணமாக எனக்கு சினிமாவில் ஏற்பட்ட இடைவெளியைப் பற்றி கொஞ்சம் சொல்கிறேன்...
என்னைச் சுற்றி பல அரசியல் அவஸ்தை களையெல்லாம் ஏற்படுத் திக்கொண்டது நானே தான். அதற்கு ஒருவகை யில் தம்பி மன்சூரலிகானும் காரணம். அவஸ்தை என்பதை தவறான அர்த் தத்தில் புரிந்துகொள்ள வேண்டாம். "எந்தக் கட்சி யிலும் இல்லாதபோது துணிச்சலாக எழுதிய நம் மால், ஒரு கட்சியில் இருக்கும்போது யோசித்து எழுத வேண்டியதாகிவிட்டதே' என்ற வருத்தம்தான்.
மன்சூரலிகான் எனக்கு செய்தது நல்லதா,… கெட்டதா… என்று சில நேரங்களில் யோசிப்பேன். அரசியலில் எனக்கென்று ஒரு பேக்ரவுண்ட் ஏற் பட்டது. மன்சூரலிகான் செய்த நல்லது என்றே நினைப்பேன். அதனால் எனக்கு கிடைத்த அனு பவங்கள் நிறைய…. ஆனால் இழப்பு என்பது மிகப் பெரியதுதான். திரைப்படத்துறையிலே எனக்கு ஏற்பட்ட இடைவெளி. நான் எழுதி வெற்றி பெற்ற படங்கள் பெரும்பாலும் அரசியல் கதைகள்,… அர சியல் வசனங்கள். நான் அ.தி.மு.க.வில் இருந்தபோது 10 வருடங்களாக அ.தி.மு.க. ஆட்சிதான். அப்போது என்னைத் தேடிவந்த படங்கள் எல்லாமே அரசியல் படங்கள். அத னால் அவற்றை யெல்லாம் வேண்டாம் என்று தவிர்க்க வேண்டியதாகி விட்டது, அது தவறாகிவிட் டது.
"லியாகத் அலிகான் அரசி யலுக்கு போய் விட்டார். இனி மேல் சினிமா வுக்கு எழுத மாட்டார்' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். "அவர் ஓ.பி.எஸ்.ஸுடன் ஐக்கியமாகிவிட்டார். தர்மயுத்தத்தில் ஒரு போர்வீரனாக மாறிவிட்டார். கையிலே வாளைத்தான் எடுப்பார். இனிமேல் சினிமாவுக்கு எழுத பேனாவை எடுக்கமாட்டார்' என்று பேசினார்கள். "நான் திரைப்படத்துறையை விட்டு அரசியல் கரையில் ஒதுங்கிவிட்டேன்' என்று திரைப்படத் துறையினர் நினைத்துவிட்டார்கள்.
இந்த நிலையில்தான்... "மாநாடு' பட வாய்ப்பு அமைந்து, அதில் என்னுடைய பங்களிப்பை சிறப் பாக அளித்தேன்.…படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. திரைப்படங்களுக்கு மீண்டும் எழுத வேண்டும் என்ற நினைப்பில் நான் இருந்தபொழுது வந்தார் தமிழ் சினிமா கம்பெனியின் தயாரிப்பாளர் இயக்குநர் திரு.கஸாலி. அவர் கதை எழுதி இயக்கப் போகும் படத்திற்கு எழுத வேண்டும் என்று அழைத்தார். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. வேறு சில புதிய இயக்குநர் களும், வெற்றிபெற்ற இயக்குநர்களும் என்னிடம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
மன்சூரலிகான் ஒரு நல்ல ஐடியாவைச் சொல்லி எழுத வேண்டும் என்று கேட்டார். உடனே ஆரம்பிக்க வேண்டும் என்பதால், அந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன்சூரலிகான் அவரே எழுதி படத்தையும் தொடங்கி விட்டார்.
ஒருநாள் திடீரென்று போன் செய்தார். அவர் தயாரித்துக்கொண்டிருக்கும் படத்தில் ஜட்ஜ் வேடத்தில் நடிக்கவேண்டும் என்று அழைத்தார். என்னை அரசியல் கட்சியுடன் இணைத்துவிட்ட மன்சூரலிகான் இப்பொழுது நடிக்கவும் வைத்திருக்கிறார்.
மீண்டும் திரைப்படங்களில் வசனகர்த்தா வாக, இயக்குநராக, நடிகனாக லியாகத்அலிகான் என்ற பெயர் வரப்போகிறது அதை நக்கீரன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த நேரத்தில் சில மாதங்களுக்கு முன் மன்சூரலிகான் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. விஜயகாந்த் அவர்களைப் பார்த்துவிட்டு வந்து தொலைக்காட்சி ஊடகத்தில் கொடுத்த பேட்டி என்று நினைக்கிறேன். எதையுமே வெளிப்படையாக, துணிச்சலாக விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பேசக்கூடிய மன்சூரலிகான்...
"லியாகத்அலிகானும், மன்சூரலிகானும் விஜயகாந்த்துடன் இருந்திருந்தால் அவர் முதலமைச்சர் ஆகியிருப்பார்' -இதுதான் மன்சூரலிகான் சொன்னது.…
"என்ன மன்சூர்… இப்படிச் சொல்லியிருக்கே'' என்றேன்.
"என் நம்பிக்கையை, என் மனசுல பட்டதை நான் சொன்னேன்.…அதுல என்ன தப்பு'' என்று கேட்டார்.
விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று ரசிகர்களின் மனதில் ஒரு எண் ணத்தை விதைத்தது எனது வசனங்கள். அதற் காகவே எழுதினேன்.… மற்ற பல ஹீரோக்களுக்கு எழுதியிருந்தாலும், அவருக்கு எழுதும்போது எனக்குள்ளே ஒரு லட்சியம் இருந்தது.
அந்த லட்சியம் நிறைவேறாமல் போனது ஏன்?
(வளரும்...)